செய்திகள்

மரக்காணம் அருகே கைப்பந்து போட்டியில் மோதல்: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2017-06-08 10:07 GMT   |   Update On 2017-06-08 10:07 GMT
மரக்காணம் அருகே கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த மோதலால் நொச்சிக்குப்பம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது நொச்சிக்குப்பம். மீனவர் கிராமமான இங்கு நேற்று மாலை கைப்பந்து போட்டி நடந்தது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த கோவிந்தராஜு என்பவருக்கும், கந்தன் என்பவருக்குமிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக மாறியது.

இருதரப்பினரும் கற்களாலும், ஆயுதங்களாலும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த கோஷ்டி மோதலில் கோவிந்தராஜு (வயது 44), துபன் (19) ஆகியோருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த அவர்கள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த மோதல் தொடர்பாக மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தன், கோவிந்தன் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த மோதல் தொடர்பாக நொச்சிக்குப்பம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News