செய்திகள்

ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ள இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-05-25 03:10 GMT   |   Update On 2017-05-25 03:10 GMT
கூடுவாஞ்சேரியில் உள்ள ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ளுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி உமாபதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கூடுவாஞ்சேரியில் உள்ள ஒத்திவாக்கம் ஏரி 23 ஹெக் டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தூர்வாரப்பட்டபோது பெருமளவு செம்மண் எடுக்கப்பட்டது. இதுகுறித்து எம்.எல்.ஏ.விடம் புகார் அளித்தோம்.

ஏரியை தூர்வாரும் ஒப்பந்ததாரர், கிராம மக்களை மிரட்டி விதிமுறைகளை மீறி பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரியில் செம்மண் எடுத்துச்சென்றார். வார்தா புயலால் சில மாதங்கள் மட்டும் செம்மண் அள்ளுவது நிறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் செம்மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கடந்த 5-ந் தேதி புதிய உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து இரவு நேரத்திலும் கனரக எந்திரங்களை பயன்படுத்தி, செம்மண் எடுத்துச்செல்லப்படுகிறது. இவ்வாறு சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழலும், நீராதாரமும் வெகுவாக பாதிக்கிறது. எனவே, ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ளுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர், கனிம வளத்துறை துணை இயக்குனர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News