செய்திகள்

அரசு பணிகளில் நிறைய திருநங்கைகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும்: பிரித்திகா யாசினி

Published On 2017-05-22 06:12 GMT   |   Update On 2017-05-22 06:12 GMT
மத்திய, மாநில அரசு பணிகளில் நிறைய திருநங்கைகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என தர்மபுரி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:

போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் 20 திருநங்கைகள் வரை தேர்வு எழுதினர்.

சென்னை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த துர்காஸ்ரீ (24) என்ற திருநங்கை தேர்வு எழுதினார்.

கேரளாவில் மெட்ரோ ரெயிலில் ராகரஞ்சினி உள்பட 23 திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவுஸ் கீப்பிங், டிக்கெட் கவுண்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் 2 திருநங்கைகள் அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது அரசு பணியில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டு வருவதற்கு தர்மபுரி டவுண் போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சேலத்தை சேர்ந்த பிரித்திகா யாசினி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:-

திருநங்கையான நான் முதன் முதலில் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் சப்- இன்ஸ்பெக்டர் வேலைக்கு பயிற்சி பெற்றேன். தற்போது தர்மபுரி நகர காவல் நிலையத்தில் செய்முறை (பிராக்டிகல்) பயிற்சி பெற்று வருகிறேன்.

எனக்கு போலீசாரும், பொதுமக்களும், நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். காவல் துறை பயிற்சியில் சில வி‌ஷயங்களை மட்டுமே நான் கற்று இருக்கிறேன். இன்னும் நிறைய வி‌ஷயங்களை கற்க வேண்டியுள்ளது. இந்த பயிற்சி முடிந்த பிறகு தான் தனிப்பட்ட முறையில் நான் முழுநேர சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்ற முடியும்.

மத்திய, மாநில அரசு பணிகளில் இன்னும் திருநங்கைகள் சேரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News