செய்திகள்

காவிரி பிரச்சனையில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தயாரா?: பி.ஆர். பாண்டியன் கேள்வி

Published On 2017-05-22 05:00 GMT   |   Update On 2017-05-22 05:00 GMT
தமிழர்கள் மீது விசுவாசம் இருக்குமேயானால் காவிரி பிரச்சனையில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் தயாரா என பி.ஆர். பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கர்நாடகாவில் தமிழர்கள் அரசியல் கட்சி தொடங்கவோ, அம்மாநிலத்தை ஆளவோ அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த காவிரி தண்ணீரை தற்போது தர மறுப்பதால் இதுவரை 400 விவசாயிகள் இறந்துள்ளனர். இது குறித்து ரஜினிகாந்த் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும், விரட்டப்பட்ட போதும், 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்ட போதும் ரஜினிகாந்த் அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

காவிரி உரிமைக்காக கடந்த 4 ஆண்டுகளாக தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூட அவர் கூறியதில்லை.


தான் நடித்த படங்கள் வெற்றி பெற வேண்டும். தான் மட்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே பிரதிபலித்து வரும் ரஜினி, தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கு பாதுகாப்பு தேடி அரசியல் பிரவேசம் என்ற நாடகத்தை தொடங்கி உள்ளார்.

இவரை ஒரு போதும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்கள் மீது ரஜினிக்கு விசுவாசம், நன்றி உணர்வு இருக்குமேயானால் ஜூன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை தஞ்சையில் நடைபெறும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் அவர் பங்கேற்ற வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான காவிரி நீரை தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டும்.

முதல்வரை சந்தித்து தமிழகத்தை அழித்து விடாதீர்கள். தமிழர்களை வாழ விடுங்கள் என்று கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்கு ரஜினி தயாராக உள்ளாரா?

இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.
Tags:    

Similar News