செய்திகள்

சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி பெற்றது யார்? - லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் கலக்கம்

Published On 2017-05-09 08:42 GMT   |   Update On 2017-05-09 08:42 GMT
சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பற்றிய தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வருமான வரித்துறையினர் இணைத்துள்ளனர். இதனால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் பற்றிய விவகாரம் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்து வருகிறது.

லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வருமா? அவர்கள் மீது உரிய முறைப்படி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது 177 கிலோ தங்கம், ரூ.132 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு சேகர் ரெட்டி எழுதி வைத்திருந்த ரகசிய டைரி ஒன்றும் அதிகாரிகள் கையில் சிக்கியது.



அந்த டைரியில் சேகர் ரெட்டி தனது ‘‘எஸ்.ஆர்.எஸ். மைனிங்’’ நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றிய விபரத்தை தேதி வாரியாக எழுதி வைத்திருந்தார். அந்த டைரி தகவல்கள் உண்மை தானா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், தமிழக அமைச்சர்கள் பலர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அது போல சுமார் 30 உயர் போலீஸ் அதிகாரிகளும் சேகர் ரெட்டியிடம் லட்சக்கணக்கில் ‘‘மாமூல்’’ வாங்கியிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அவர்களது பெயர்களை வெளியிடாத வருமான வரித்துறை, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்துடன் எந்தெந்த அமைச்சர்கள், அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்ற விபரம் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 வாரத்துக்கு முன்பே இந்த கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தலைமை செயலாளர் தான் இந்த வி‌ஷயத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தத் துறை தலைமை செயலாளரிடம் இருந்து வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை.

தமிழக அரசு இதில் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதால், வருமான வரித்துறையினர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்துடன் அவர்கள், சேகர் ரெட்டியிடம் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் பற்றிய தகவல்களை இணைத்துள்ளனர்.

மேலும் தமிழக அரசுக்கு ஏற்கனவே அனுப்பிய கடித நகலையும் சேர்த்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுவதால் தமிழக அமைச்சர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.

உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா விற்க அனுமதி கொடுத்த உயர் போலீஸ் அதிகாரிகள் கதி கலங்கி போய் உள்ளனர்.

இதற்கிடையே சேகர் ரெட்டியிடம் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களும் பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை பரிந்துரைத்துள்ளது.

லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கூறி வருகிறார்கள். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்கும் போதுதான், சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் யார்-யார் என்ற விபரம் தெரியவரும்.

Tags:    

Similar News