செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்: டெல்லியில் மேலும் ஒரு தரகர் கைது

Published On 2017-04-28 06:14 GMT   |   Update On 2017-04-28 06:14 GMT
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஏற்கனவே தரகர் சுகேஷ், டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4-வது நபராக ஹவாலா தரகர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கடந்த 17-ந்தேதி சுகேஷ் சந்திரசேகர் என்ற தரகர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் தங்கி இருந்த ஓட்டல் அறையில் ரூ.1 கோடியே 30 லட்சம் பணமும் சிக்கியது. அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் மூலம்  இந்த பணம் தனக்கு கிடைத்ததாக சுகேஷ் வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் வழங்கினர். இதனை ஏற்று விசாரணைக்காக டெல்லி சென்ற தினகரன் கடந்த 25-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.


டி.டி.வி.தினகரனுக்கு நண்பர் மல்லிகார்ஜுனா மூலமாகவே சுகேசுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவரது ஏற்பாட்டின் பேரிலேயே இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது.

இதனை தொடர்ந்து மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இருவரையும் காவலில் எடுத்த டெல்லி போலீசார்  அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மேலும் பலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை டெல்லி போலீசார் கண்காணித்து வந்தார்கள். இன்று டெல்லியில் மேலும் ஒரு ஹவாலா தரகர் பிடிப்பட்டார்.

அவரது பெயர் நரேஷ். டெல்லியை சேர்ந்த இவர் தாய்லாந்தில் தலைமறைவாக இருந்தார். இன்று அவர் டெல்லி திரும்பியபோது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஹவாலா ஏஜெண்டாக  நரேஷ் செயல்பட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரனுடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மூலமாகவே ரூ.10 கோடி பணத்தை சென்னையில் இருந்து கொச்சி வழியாக தினகரன் டெல்லிக்கு கொண்டு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹவாலா பணப்பரிமாற்ற  முறையிலேயே இந்த பணம் டெல்லியில் இருக்கும் சுகேசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுகேஷ் தங்கி இருந்த அறையில் கைப்பற்றபட்ட ரூ.1 கோடியே 30 லட்சம் நரேஷ் மூலமாகவே கொடுக்கப்பட்டதும் தெரிய வந்தது.


இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஏற்கனவே தரகர் சுகேஷ், டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4-வது நபராக ஹவாலா தரகர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரேஷ் கைதானதை தொடர்ந்து மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்டும் டெல்லியில் பிடிபட்டுள்ளார். அவரிடமும் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் அவரும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Similar News