செய்திகள்

பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

Published On 2017-04-28 01:32 GMT   |   Update On 2017-04-28 01:32 GMT
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
சென்னை:

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு வரை, தமிழக பள்ளிக்கூடங்களில் 11-ம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. எனவே அப்போது 10-ம் வகுப்பு தேர்வு சாதாரண தேர்வாகவும், 11-ம் வகுப்பு தேர்வு அரசு பொதுத்தேர்வாகவும் இருந்து வந்தது.

பின்னர் ஏற்பட்ட காலமாற்றத்தில், பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி), பிளஸ்-2 தேர்வுகள் மட்டுமே அரசு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டது.

பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பிளஸ்-1 இறுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் பற்றி அதிக அளவில் கவலைப்படுவது இல்லை. சில பள்ளிகளில் பிளஸ்-1 பாடங்கள் நடத்தாமல், பிளஸ்-1 வகுப்பில் பிளஸ்-2 பாடங்களை நடத்துவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு அவசியம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற அனுப்பப்பட்டுள்ளது.

மே 7-ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்குள் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.

நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் பல பிளஸ்-1 பாடங்களில் இருந்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே பிளஸ்-1 தேர்வை அரசு பொதுத்தேர்வு என்று அறிவித்தால் கண்டிப்பாக மாணவர்கள் பிளஸ்-1 பாடங்களை படிப்பார்கள் என்று அரசு கருதுகிறது.

எனவே பிளஸ்-1 தேர்வை பொதுத்தேர்வாக அறிவிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News