செய்திகள்

டி.டி.வி.தினகரன் சிக்கியது எப்படி?: விசாரணையில் அம்பலமான பரபரப்பு தகவல்கள்

Published On 2017-04-26 08:19 GMT   |   Update On 2017-04-26 08:19 GMT
ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எப்படி சிக்கினார் என்ற விவரம் இன்று தெரியவந்துள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் இரட்டை இலை சின்னம் நிச்சயம் தேவை என்பதை டி.டி.வி.தினகரன் உணர்ந்திருந்தார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்துடன்தான் களம் இறங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில்தான் அவரிடம் யாரோ இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை அணுகலாம் என்று தவறான யோசனையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இடைத்தரகர் சுகேசை தினகரனிடம் அறிமுகம் செய்துள்ளனர். அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் இடைத்தரகர் சுகேசை பற்றி தினகரன் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.

சுகேசுடன் பேசிய பிறகு முன் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா ஏஜெண்டு ஷாபைசல் மூலம் கைமாறியது. சென்னை வந்து ஒரு நபரிடம் பணக்கட்டுகளை பெற்ற ஷாபைசல் அதை டெல்லிக்கு கொண்டு சென்று சுகேசிடம் ஒப்படைத்து இருக்கிறார்.


இதற்கு மற்றொரு ஹவாலா ஏஜெண்டான கோபி என்பவரும் உதவியாக இருந்துள்ளார். சுகேஷ் போலீசாரிடம் சிக்கிய போது இந்த 2 ஹவாலா ஏஜெண்டுகளை பற்றி உளறிவிட்டான். இதன் காரணமாக 2 ஏஜெண்டுகளும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

அவர்களிடம் உரிய முறையில் விசாரித்த போது ரூ.10 கோடி முன் பணம் கைமாறியதாக உண்மையை கக்கிவிட்டனர். இதன் தொடர்ச்சியாகவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்திய போது டி.டி.வி.தினகரன் அதில் சிக்கவேண்டிய சூழ்நிலைகள் உருவானது.

தரகர் சுகேஷ் மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் ஷாபைசல் மற்றும் கோபி ஆகியோர் கொடுத்திருக்கும் வாக்குமூலங்கள் மற்றும் அவர்களிடம் இருந்து திரட்டப்பட்டுள்ள ஆதாரங்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக வலுவான நிலையில் உள்ளன.

Similar News