செய்திகள்

இளம்வயது திருமணம் செய்து வைக்கப்பட்ட 10–ம் வகுப்பு மாணவி பலி

Published On 2017-04-25 16:39 GMT   |   Update On 2017-04-25 16:39 GMT
காரிமங்கலம் அருகே இளம்வயது திருமணம் செய்து வைக்கப்பட்ட 10–ம் வகுப்பு மாணவி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரிய மொரசுப்பட்டியை சேர்ந்தவர் கராகவுண்டர், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் புஷ்பா (வயது 16). இவர் பொம்மஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குட்டகாட்டூரை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கும், மாணவி புஷ்பாவிற்கும் தேவீரஅள்ளி கோவிலில் பெற்றோர் இளம்வயது திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வருவாய்த்துறையினர் பெண்ணின் பெற்றோரை அழைத்து இளம்வயது திருமணம் குறித்த சட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்து கூறி புஷ்பாவை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தர்மபுரி குழந்தைகள் நல அமைப்பு இருவீட்டு பெற்றோர்களையும் சந்தித்து மாணவிக்கு திருமணம் செய்தது செல்லாது என்றும், மீண்டும் அவரை திருமணத்திற்கு வற்புறுத்தினால் இருவீட்டார் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தனர்.
மாணவி திடீர் சாவு

அதன் பின்பு மாணவி புஷ்பா பெற்றோர் வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்று 10–ம் வகுப்பு தேர்வை தற்போது எழுதி உள்ளார். நேற்று முன்தினம் புஷ்பாவிற்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் இறந்த புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவி உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இளம்வயது திருமணம் செய்து வைக்கப்பட்ட 10–ம் வகுப்பு மாணவி திடீரென இறந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News