செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க பதவியை ஏலம் விடுகின்றனர்: ஸ்டாலின்

Published On 2017-04-25 07:51 GMT   |   Update On 2017-04-25 07:52 GMT
தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பதவியை ஏலம் விடுகின்றனர் என திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூரில் விவசாயத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது விவசாய கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் வெங்கையாநாயுடு இதுபற்றி தெரியாமல் பேசி வருகிறார்.

தமிழகத்தில் பதவியை ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஜெயக்குமார் நிதி அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தருவதாக கூறுகிறார். கவர்னர் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்படி பதவியை ஏலம்போடக்கூடாது. ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிரிந்து சென்ற அணியினருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.


தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. இதனை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் மூடப்பட்ட மதுபான கடைகளை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. மத்தியஅரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதனை எதிர்த்து பெரியஅளவில் போராட்டம் நடத்துவோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை போலீசார் கைது செய்தனர். எங்களை அழைத்து செல்ல போதிய வாகன வசதி இல்லாததால் 4 கி.மீட்டர் தூரம் நடக்க வைத்து தனியார் மண்டபத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News