செய்திகள்

புதுவையில் 3 தமிழக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

Published On 2017-04-25 06:42 GMT   |   Update On 2017-04-25 06:43 GMT
புதுவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடந்துவரும் நிலையில் 3 தமிழக அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி புதுவையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள், புதுவை அரசு பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. ஆனால் தமிழக அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது. தமிழகத்தில் இருந்து புதுவை வரும் பஸ்களும் அதுபோல் புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் இயங்கியது.

இந்த நிலையில் காலை 9.30 மணியளவில் புதுவையில் இருந்து சென்னைக்கு சென்ற தமிழக அரசு பஸ் ஒன்று வெங்கடசுப்பாரெட்டியார் சிலை ரவுண்டாணாவில் திரும்பியது. அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது. இதையடுத்து பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். அதன் பின்னர் அந்த பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேபோல் சென்னையில் இருந்து புதுவை வந்த தமிழகஅரசு பஸ் மீது சுப்பையாசிலை அருகே ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதுமாக நொறுங்கியது. இதையடுத்து அந்த பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கிருந்து பஸ்நிலையத்துக்கு அந்த பஸ் கொண்டு செல்லப்பட்டது.

இதேபோல் விழுப்புரத்தில் இருந்து புதுவை வந்த தமிழக அரசு பஸ்சை இந்திராகாந்தி சிலை அருகே ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

Similar News