செய்திகள்

வீடு கட்டி தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கட்டிட தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2017-04-24 17:06 GMT   |   Update On 2017-04-24 17:06 GMT
வீடு கட்டி தரக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு , அனைத்து தொழிலாளர் நலச் சங்கத்தின் பலன்களை வாரியம் மூலம் உடனே வழங்க வேண்டும், சொந்த வீடு இல்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கவுரவ தலைவர் காளப்பட்டி செல்வராஜ், தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

கோவை மாவட்டம் கூடலூர் பேரூராட்சியில் சிவசக்தி காலனி, காந்தி நகர், மாகாளியம்மன் நகர் ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு கலெக்டர் ஹரி ஹரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் புதிதாக டாஸ்மாக் கடை குடியிருப்பில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு தலைவர் கே.மோகன்ராஜ், கலெக்டர் ஹரிஹரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை வி.எச். ரோட்டில் காவலர் குடியிருப்பு சுற்றுசுவர் இடிந்து பல மாதங்களாக இருந்து வருகிறது. மேலும் இதை ஓட்டி டாஸ்மாக் கடையும் உள்ளது. இதனால் இந்த பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டமும் இருந்து வருகிறது. எனவே காவலர் குடியிருப்புக்கு சுற்று சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News