செய்திகள்

அச்சம், பொறாமை காரணமாக ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறுகிறார் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Published On 2017-04-24 15:45 GMT   |   Update On 2017-04-24 16:15 GMT
அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்கிற அச்சம் மற்றும் பொறாமையின் காரணமாக ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் நலன் சார்ந்து எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். 

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நிதி ஆயோக்கின் மூன்றாவது ஆளுமை கூட்டம் 23.4.2017 அன்று புதுடில்லியில் பிரதமர் அவர்களால் கூட்டப்பட்டது. இந்தக்கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கவேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில்தான் விவாதமும் நடைபெற்றது. அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப குறிப்பிட்ட விவாதப் பொருள்களில் மாநில அரசு ஆற்றிவரும் பணிகளையும், மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசின் கருத்துக்களையும், விரிவாக நான் எடுத்துரைத்தேன்.



இதுபற்றி கருத்து தெரிவித்த மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள், தமிழகம் சந்தித்து வரும் மிகப்பெரிய கடன் சுமை பற்றியும், நிதி நெருக்கடி பற்றியும் நித்தி அயோக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மத்திய மாநில அரசுகளின் நிதி நிலை பற்றியும், கடன் அளவு பற்றியும் அயதக் கூட்டத்தில் விவாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் பொருள்
இல்லை என்பதனால், இதுபற்றிய கருத்துக்கள் என்னுடைய பேச்சில் இடம் பெறவில்லை. 

எனினும், மாநில அரசின் கடன் பற்றியும், நிதிநிலை பற்றியும் கடயத வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மிக விரிவாக பேசப்பட்டதை ஸ்டாலின் அவர்கள் நன்கு அறிவார். இதுமட்டும் அல்லாமல், இந்தியாவிலேயே குறைந்த அளவு கடன் வைத்துள்ள முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி விரிவாக பலமுறை விளக்கப்பட்டும் அது புரியாததுபோல் தமிழ்நாட்டின் கடன் சுமை அளவு அதிகரித்து உள்ளது என்றும், நிதி நெருக்கடியில் தமிழகம் உள்ளது என்றும் திரும்பத் திரும்ப கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. எனினும், இந்த விவரங்களை மக்கள் நன்கு அறிவார்கள் என்றாலும், ஒரு தவறான தகவல் மக்கள் மனதில் பதியக்கூடாது என்பதற்காக மீண்டும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் விடாமுயற்சிகளின் காரணமாகவும், தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 17.4.2017 அன்று மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கி உள்ளதையும் இங்கு நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க அரசுக்கு நல்ல பெயர் வயதுவிட்டது என்கிற அச்சம் மற்றும் பொறாமையின் காரணமாக ஆதாரம் இல்லாத ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். என் உரையை நன்கு படித்துப்பார்த்தால் எந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு செயல்பட்டு வருகிறது என்றும், மாநிலத்தின் பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் குறித்து நான் நித்தி அயோக் கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன் என்பதும் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, தமிழக மக்களுக்கு நன்றாகப் புரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Similar News