செய்திகள்

தோவாளை அருகே என்ட் டூ என்ட் அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்தது - 15 பேர் காயம்

Published On 2017-04-24 11:56 GMT   |   Update On 2017-04-24 11:56 GMT
தோவாளை அருகே என்ட் டூ என்ட் அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்:

நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று காலை 10 மணிக்கு என்ட் டூ என்ட் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பகல் 11 மணி அளவில் தோவாளையை அடுத்த குமரன்புதூர் விலக்கு அருகே வந்தது. அப்போது பஸ்சில் முன்னால் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ திடீரென அருகே உள்ள பெட்ரோல் பல்க் நோக்கி திரும்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பஸ் டிரைவர் ஆட்டோ மீது மோதாமல் நிற்க பஸ்சை திருப்பினார். இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ் சாலையின் அருகே உள்ள கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள், பெண்கள் அனைவரும் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் ஆம்புலன்சில் எற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்து காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே சாலையில் இன்று அதிகாலையில் தான் ஆம்னி பஸ் ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்த சில மணி நேரத்தில் மீண்டும் அதே சாலையில் மற்றொரு விபத்து நடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Similar News