செய்திகள்

மெரினா கடல் மணலில் அமர்ந்து புத்துணர்வு பெறும் மு.க.ஸ்டாலின்

Published On 2017-04-24 06:42 GMT   |   Update On 2017-04-24 06:42 GMT
அரசியல் பணி சுமையில் இருந்து இளைப்பாறும் வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஓய்வு நேரத்தில் சென்னை மெரினா கடற்கரை மணலில் அமர்ந்து உற்சாகமாக உரையாடி புத்துணர்வு பெற்று வீடு திரும்புகிறார்.
சென்னை:

நீல கடலும், வெண்மணற் பரப்பும் பார்ப்பதற்கு மட்டும் பரவசமூட்டுவது இல்லை. இதயத்தை இலகுவாக்குவது, அழுத்தத்தை போக்கி மனதை அலைபாய வைக்கும் கவிதை வரும். நல்ல கற்பனை வரும். புது புது சிந்தனைகள் அலை அலையாய் வரும்.

பெரிய தலைவர்கள் முதல் கவிஞர்கள் வரை பலருக்கு உற்சாகமும், உத்வேகமும் அளித்தது மெரினா கடற்கரை.

எனவே மெரினாவில் அமர்ந்து காற்று வாங்குவதை எல்லா பிரபலங்களும் விரும்புகிறார்கள்.

அவர்களில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒருவர். தற்போது அரசியலும் தகிக்கிறது. வெளியில் வெப்பமும் தகிக்கிறது.

இந்த நேரத்தில் சில மணி நேரங்கள் மெரினாவில் சென்று அமர்ந்து காற்று வாங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

பொதுவாக சனிக் கிழமைகளில் சென்னையில் இருந்தால் இரவு 8 மணிக்கு பிறகு மு.க.ஸ்டாலினின் வாகனம் மெரினாவை நோக்கி செல்லும்.


வீட்டில் இருந்து புறப்படும் போது ஒன்றிரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளையும் தூக்கி போட்டுக் கொள்கிறார்கள்.

அவரது நட்பு வட்டாரங்களான துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் என்று யார் இருந்தாலும் அவர்களையும் உடன் அழைத்துக் கொள்கிறார்.

கடற்கரை மணலில் இறங்கி நடக்கும் போது எல்லா டென்‌ஷனையும் மறந்து ஜாலி மூடுக்கு மாறிவிடுகிறார். மணலில் நாற்காலிகளை போட்டு அமர்ந்து காற்று வாங்கிய படியே அரசியல் வெளி உலகம் பற்றி சாதாரணமாக பேசுகிறார்கள். சில நேரங்களில் முக்கிய அரசியல் பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கிறார்கள்.

காற்று வாங்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக பாதுகாவலர்களை தள்ளியே நிற்க சொல்கிறார்.

குறைந்தது 2 மணி நேரமாவது கடற்கரை மணலில் அமர்ந்து உற்சாகமாக உரையாடி புத்துணர்வு பெற்று வீடு திரும்புகிறார்.

மு.க.ஸ்டாலினை பார்க்கும் பலர் அவரிடம் நெருங்கி சென்று பேசவும் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசைப்படுகிறார்கள். அப்படி வருபவர்களுடன் அவரும் போஸ் கொடுக்கிறார். அவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் விசாரிக்கவும் செய்கிறார்.


மெரினா கடற்கரையில் பிரபலம் தேங்காய், மாங்காய், சுண்டல்தான். காற்று வாங்கி கொண்டிருப்பவர்களின் காதுகளில் சுண்டல் சத்தம் தவறாமல் கேட்கும். தன் அருகில் சிறுவர்கள் சுண்டல் கொண்டு வந்தால் தனக்கு பிடித்தமானதை வாங்கி ருசித்து கொள்கிறார்.

கருணாநிதியும், திட காத்திரமாக இருந்த காலங்களில் அடிக்கடி மெரினாவில் வந்து அமர்ந்திருப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக ஸ்டாலின் நினைவு கூறுகிறார்.

Similar News