செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தால் போராட்டம் வாபஸ்: அய்யாக்கண்ணு பேட்டி

Published On 2017-04-23 05:44 GMT   |   Update On 2017-04-23 05:45 GMT
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை, எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்தால் போராட்டம் வாபஸ் பெறுவோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41-வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்தார்.

அப்போது அவர்களின் கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று உறுதியளித்த அவர் தமிழக விவசாயிகள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் நடுரோட்டில் கடுமையான வெயிலிலும், குளிரிலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை பிரதமர் எங்களை சந்திக்க முன்வரவில்லை. பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாண போராட்டம் நடத்தியும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் போராட்டத்தை கைவிடக்கோரி தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எங்களது நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதையும் வரவேற்கிறோம்.

இன்று 41-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் எங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று உறுதி அளித்துள்ளார்.


அவர் எங்களையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வைத்து, எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூற வழியமைத்து கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News