செய்திகள்

திருப்பூர் கனரா வங்கியில் திடீர் தீ விபத்து: ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்

Published On 2017-04-20 11:30 GMT   |   Update On 2017-04-20 11:30 GMT
திருப்பூர் கனரா வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோட்டில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் வங்கியும் மேல் தளத்தில் லோன் வழங்கும் பிரிவும் உள்ளது. இன்று காலை மேல் தளத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது.

இதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வங்கியை விட்டு அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். கரும்புகை தீயாக மாறி மேல் தளம் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்கள் வருவதற்குள் லோன் வழங்கும் அலுவலகம் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த நில அடமான பத்திரங்கள் உள்பட அனைத்து ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசமானது.

தீ மளமளவென எரிந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை.அப்போது தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. இதனால் கீழ் தளத்தில் இருக்கும் வங்கிக்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. கீழ் தளத்தில் பணம், நகை மற்றும் லாக்கர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மற்றொரு வாகனம் வந்தது. அதன் மூலம் தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News