செய்திகள்

தமிழக அரசியலில் அசாதாரண சூழல்: அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர உத்தரவு

Published On 2017-04-18 20:13 GMT   |   Update On 2017-04-18 20:13 GMT
தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலால் அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னையில் அனைத்து காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி காவலர்களை பணிக்கு வர, சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் கட்சியின் ஒட்டுமொத்த கருத்து, கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் விருப்பம் என்று கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச் செல்வன், ஜக்கையன், கதிர்காமு, வெற்றிவேல், சாத்தூர் சுப்பிரமணியம், செல்வ மோகன்தாஸ், ஏழுமலை, சின்னதம்பி உள்ளிட்டோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அடையாறில் உள்ள அவரது வீட்டில் அவரை சந்தித்து பேசினர்.

இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக (அம்மா) அணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இவ்வாறாக மாறி மாறி ஆட்சியில் இருக்கம் உட்கட்சிக்குள் ஏற்படும் எதிர்மறை கருத்துக்களால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுவதாகக் கூறி சென்னையில் உள்ள காவலர்களை காலை 6 மணிக்கு பணிக்கு வர, சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். 

Similar News