செய்திகள்

கும்பகோணம் வாலிபர் கொலையில் அண்ணன் - தம்பி கைது

Published On 2017-04-17 07:43 GMT   |   Update On 2017-04-17 07:43 GMT
கும்பகோணத்தில் வாலிபர் கொலையில் அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பட்டீஸ்வரம்:

கும்பகோணம் சகாஜி நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் விக்ரம் (28). இவர் கும்பகோணம் பாலக்கரையில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

கடந்த 14-ந் தேதி மாலை விக்ரம் தனது நண்பர்கள் பாரதி தாசன், செல்வ கணபதி ஆகியோருடன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் கோதண்டபாணி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் விக்ரம் மற்றும் அவரது நண்பர்களை வழி மறித்து அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதில் விக்ரமின் முகம், மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.

அவர் சம்பவ இடத்திலே பிணமானார். அவரது நண்பர்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது விக்ரமை கொலை செய்தது கும்பகோணம் கர்ண கொல்லை தெருவை சேர்ந்த அண்ணன் - தம்பிகளான சுள்ளான் என்கிற சதிஷ் (35), வினோத் (33) என்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடலூரில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 2 பேரையும் கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மீது கும்பகோணம் கிழக்கு, மேற்கு, நாச்சியார் கோவில் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்கு இருப்பதும், பணம் கொடுக்கல்-வாங்கலில் இந்த கொலை நடைபெற்றதும் தெரிய வந்தது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News