செய்திகள்
சிறுத்தை புகுந்த ஆட்டு தொழுவத்தை படத்தில் காணலாம்.

களக்காடு அருகே சிறுத்தை மீண்டும் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

Published On 2017-04-17 05:07 GMT   |   Update On 2017-04-17 05:08 GMT
களக்காடு அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்துள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 80). விவசாயி இவர் தனது வீட்டு முன்பு தனக்கு சொந்தமான ஆடுகளை கட்டி போட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவில் திடீர் என ஆடுகள் மிரண்டு சத்தம் போட்டன. இதைக்கேட்டு மூர்த்தி வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை 1 ஆட்டை அடித்துக் கொன்று வாயில் கவ்வியப்படி சென்றது.

இதனை பார்த்த அவர் சத்தம் போட்டார். அதற்குள் அக்கம், பக்கத்தினரும் விரைந்து வந்து சிறுத்தையை விரட்டினர். இதனால் சிறுத்தை ஆட்டை போட்டு விட்டு சென்று விட்டது. சிறுத்தை தாக்கியதில் அந்த ஆடு இறந்தது. இதுகுறித்து மூர்த்தி களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் ஆட்டின் உடலை பார்வையிட்டனர். ஏற்கனவே கடந்த 13-ம் தேதி இரவில் மூங்கிலடியில் சாமுவேல் ராஜ் என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகளை சிறுத்தை அடித்துக்கொன்றது. அதனால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதட்டம் அடங்குவதற்குள் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால் பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும், பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருவதாக பொதுமக்கள் கூறினர்.

இந்நிலையில் களக்காடு அடுத்த மூங்கிலடி குளம் அருகே இன்று அதிகாலை 3 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. சிறுத்தையை பார்த்த விவசாயிகள் தீப்பந்தத்தை காட்டி சிறுத்தையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

Similar News