செய்திகள்

ஏரிகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் கேன் விலை அதிரடி உயர்வு

Published On 2017-04-15 08:35 GMT   |   Update On 2017-04-15 08:35 GMT
ஏரிகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையொட்டி தண்ணீர் கேன் விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. ரூ.20-க்கு விற்பனையான தண்ணீர் கேன் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
சென்னை:

பருவமழை பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டன. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலும் வாட்டி வதைக்கிறது.

சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்கள் வாங்கி மக்கள் சமாளித்து வருகிறார்கள். கடைகளில் விற்பனையாகும் குடிநீர் கேன்களுக்கு தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதையொட்டி குடிநீர் கேன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் சில்லரை கடைகளில் ரூ.20, ரூ.30 என விற்பனையான 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் விலை தற்போது ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. ஒருசில இடங்களில் தண்ணீர் கேன்கள் உடனடியாக விற்று தீர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து குடிநீர் கேன் விற்பனை செய்யும் வேப்பேரியை சேர்ந்த லட்சுமணன் கூறியதாவது:-

கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், ஏரிகளில் தண்ணீர் இல்லாததாலும் தற்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னை நகரை சுற்றிலும் 1,800 முதல் 3,000 வரையிலான தனியார் குடிநீர் கேன் கம்பெனிகள் உள்ளன. இதன்மூலம் சென்னை நகருக்கு குடிநீர் கேன்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

ரூ.1 முதல் ரூ.2 வரையிலான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில்லரை வியாபாரிகள் தற்போது கேன்களுக்கு விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.



ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட கேன்களுக்கு தற்போது ரூ.30, ரூ.40 என விலையை ஏற்றி விட்டனர். குடிநீர் கேன்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை. வியாபாரிகள்தான் செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News