செய்திகள்

அரசு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நேரடியாக களத்திற்கு செல்வேன்: கவர்னர் கிரண்பேடி

Published On 2017-04-12 05:04 GMT   |   Update On 2017-04-12 05:04 GMT
அரசு எனக்கு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நேரடியாக களத்திற்கு செல்வேன் என கவர்னர் கிரண்பேடி ஆவேசமாக கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனது ஆதரவு அதிகாரியான புதுவை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டதில் இருந்து கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் அமைச்சரவையை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்.

கவர்னரின் விமர்சனத்திற்கு ஆட்சியாளர்களின் தரப்பில் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பதிலடி அளித்து வருகிறார்கள். இதனால் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் வில்லியனூர் கால்நடை மருத்துவமனையை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தன்னுடைய பணியை யாராலும் தடுக்க முடியாது என்றும் ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நேரடியாக களத்திற்கு செல்வேன் என்றும் கூறினார்.

தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், இயக்குனர்கள் தினமும் நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்தால் தான் மக்கள் பிரச்சனைகளை அறிய முடியும். இதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்.

மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். எனது பணியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அரசு எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் நேராக களத்திற்கு செல்வேன். மத்திய அரசுக்கு நேரடியாக நான் தான் தகவல்களை தெரிவிக்கிறேன்.

தலைமை செயலாளரின் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படாமல் உள்ளது. இதுவரை 43 கோப்புகள் அவருக்கு அனுப்பி உள்ளேன். ஆனால் எந்த பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை.


அதே போல் முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் பதில் கூறுவதில்லை. இது எப்படி மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். புதுச்சேரி வளர்ச்சிக்காக என்னுடன் முதல் -அமைச்சரும், தலைமை செயலாளரும் இணைந்து செயல்பட வேண்டும்.

கோப்புகளை முடக்குவதாக புகார் கூறுவது சரியல்ல. கோப்புகளை நான் முடக்கவில்லை. அமைச்சரவையோடு மாற்று இருந்து இருந்தால் கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன்.

மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தரவேண்டும் என்று கூறுகிறார்கள். நான் வியாபாரி அல்ல. நிதி தொடர்பான கோப்புகள் முழுமையாக இல்லை. நல்ல திட்டமாக இருந்தால் மத்திய அரசு நிதி அளிக்கும். மாநில வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே நான் செயல்படுவேன்.

என்னுடைய பணியை யாராலும் தடுக்க முடியாது. எனக்கான பதவிக்காலம் இருக்கும் வரை மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். அரசு எனக்கு ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் நேரடியாக களத்திற்கு செல்வேன்.

இவ்வாறு கிரண்பேடி கூறினார்.

Similar News