செய்திகள்

தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்கக்கோரி வழக்கு: பதிலளிக்க மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-04-09 03:18 GMT   |   Update On 2017-04-09 03:18 GMT
தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்கக்கோரி வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் அன்பழகன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழக கவர்னராக இருந்த கே.ரோசய்யாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.



இதையடுத்து தமிழக பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டார். அவர் சில நாட்கள் மட்டுமே தமிழகத்தில் தங்கியிருந்து பணிகளை கவனிக்கின்றார். அதனால், கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் திறமையான நிர்வாகம் நடைபெறவில்லை. சென்னை பல்கலைக்கழகம் உள்பட 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களில் உள்ள பதவிகளும் காலியாக இருக்கின்றன.

எனவே, தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் பதில் இல்லை. அதனால், நிரந்தரமாக ஒரு கவர்னரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Similar News