செய்திகள்

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

Published On 2017-04-08 03:23 GMT   |   Update On 2017-04-08 03:23 GMT
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் சென்னை தியாகராயநகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரூ.34 கோடிக்கு, அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.147 கோடி ரொக்கப்பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர்ரெட்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் 5 பேரும் ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, இதே குற்றத்திற்காக மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்த வழக்கில், கடந்த மாதம் சேகர்ரெட்டி, ஆடிட்டர் பிரேம் குமார், சீனிவாசலு ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரையும், மார்ச் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்தார்கள்.

இந்நிலையில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி நசீமா பானு விசாரித்தார். அப்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை வக்கீல் ரமேஷ் வாதிட்டார். இதையடுத்து 3 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News