செய்திகள்

மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தை பயன்படுத்தி மோசடி: தமிழக அரசு எச்சரிக்கை

Published On 2017-04-07 19:48 GMT   |   Update On 2017-04-07 19:48 GMT
மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடி செய்வதாகவும், அதில் சிக்காமல் கவனமாக இருக்கும்படியும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

மத்திய அரசின் வீட்டுவசதி திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடி செய்வதாகவும், அதில் சிக்காமல் கவனமாக இருக்கும்படியும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய பயனாளிகளைக் கண்டறிந்து வீட்டுவசதி ஏற்படுத்தித் தருவதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் பணம் திரட்டுவதாக மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற ஏதுவாக தனி நபரையோ அல்லது நிறுவனத்தையோ மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.


இத்திட்டம் தொடர்பாக அனுமதியற்ற வகையில் பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்துவோர் தண்டனைக்குரிய நடவடிக்கைக்கு உள்ளாவர். இத்திட்டத்தின் கீழ் தேவைக் கணக்கெடுப்பை இலவசமாக நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பணிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் இணையதளத்தில் இத்திட்டத்தால் பயன்பெறக்கூடிய பயனாளிகள் நேரடியாக பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர மாநில அரசின் பொது சேவை மையத்தில், மிகக்குறைந்த பதிவுக் கட்டணமாக ரூ.25 மற்றும் சேவைக் கட்டணம் செலுத்தி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

எனவே, ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் பதிவு செய்ய மத்திய அரசின் அனுமதி பெற்ற நபர்கள் என கூறிக்கொண்டு, தகவல்கள் மற்றும் பணம் திரட்டும் எந்த தனிநபர் அல்லது நிறுவனத்தையும் பொது மக்கள் நம்பவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News