செய்திகள்

கவர்னர் மாளிகையில் கூடுதலாக 25 ஊழியர்களை நியமித்த கிரண்பேடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2017-04-07 09:32 GMT   |   Update On 2017-04-07 09:32 GMT
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் ஏற்கனவே 55 பணியாளர் இருக்கும் நிலையில் கூடுதலாக 25 ஊழியர்களை கவர்னர் கிரண்பேடி நியமித்ததாக காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணன் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை கவர்னர் மாளிகையில் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. மாளிகைக்கு 55 நிரந்தர ஊழியர்கள் உள்ள நிலையில் மேலும் சேவை வாய்ப்பு (சர்வீஸ் பிளேஸ் மெண்ட்) முறையில் 25 பேரை பெற்று பணியில் வைத்துள்ளனர்.

அவர்களில் ஒருவரை ஆளுநரின் சிறப்பு அதிகாரியாக நியமித்துக் கொள்ளாமல், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரை ரூ.3 லட்சம் சம்பளத்தில் தனது சிறப்பு அதிகாரியாக நியமித்துக் கொள்ள கவர்னர் அனுமதி கேட்டார்.

புதுவையில் தலைமை செயலாளருக்கே ரூ.2 லட்சம் தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு கார், அலுவலகம் கொடுத்தால் ரூ.48 ஆயிரம் சம்பளத்தில் ரூ.23 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் கவர்னரின் சிறப்பு அதிகாரிக்கு தங்குவதற்கு இடம், கார், உணவு ஆகிய அனைத்தும் கொடுத்தும் ஒரு ரூபாய் கூட பிடித்தம் செய்யப்படவில்லை.

மிஜோராம் மாநிலத்தில் தன் மகளுக்கு அந்த மாநில மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று கவர்னர் மோசடி செய்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதாகக் கூறும் கவர்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட லோக்பால் அமைப்புக்கும் தலைவரை நியமித்து அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமருக்கு கோரிக்கை வைப்பாரா?

மத்திய அமைச்சர்களை சந்தித்ததன் மூலம் அவர் கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி பெறுவது, புதிய திட்டங்கள் செயல்படுத்துவது என எதையும் செய்யவில்லை.

இவ்வாறு லட்சுமி நாராயணன் கூறினார்.

Similar News