செய்திகள்

எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கவர்னர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பிக்கட்டும்: சபாநாயகர் சவால்

Published On 2017-04-05 08:08 GMT   |   Update On 2017-04-05 08:08 GMT
எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கவர்னர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பிக்கட்டும். அதன் பிறகு பார்க்கலாம் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் புகார் செய்ததை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து புதிய ஆணையாளரை நியமிக்க சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

சபாநாயகர் உத்தரவை ஏற்று தலைமை செயலாளர் மனோஜ்பரிதா புதிய ஆணையாளராக கணேசனை நியமித்தார். சந்திரசேகனை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்.

ஆணையர் கணேசன் பணி செய்ய சென்றபோது கவர்னரின் செயலர் அளித்த உத்தரவை காட்டி சந்திரசேகரன் மீண்டும் ஆணையாளராக பொறுப்பேற்றார்.

இந்த தகவல் சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு கிடைத்தது. இதையடுத்து டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமை அழைத்து தனது உத்தரவுப்படி பணியாற்ற சென்ற கணேசனுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பார்த்து கொள்ளும்படியும், இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் சபாநாயகரை அவர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. இதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். சபாநாயகர் அளித்த பதில்கள் விபரம் வருமாறு:-

கேள்வி:- நேற்றைய தினமே டி.ஜி.பி.க்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தீர்களே?

பதில்:- நிர்வாகத்தில் காலதாமதம் ஏற்படும். இன்று தன் கருத்தை டி.ஜி.பி. வாய்மொழியாக கூறிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக ஆராய்வோம்.

கே:- அதிகாரி அளித்த புகாரின்மீது எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா?

ப:- எனக்கு தெரியவில்லை.

கே:- கவர்னர் அதிகாரிகளை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறாரே?


ப:- சமூக வலைதள விமர்சனம் அவரை பின்பற்றும் சிலரை மட்டும்தான் சென்று சேரும். பத்திரிகைகளுக்கு என தனியாக தன் விமர்சனத்தை அனுப்பியுள்ளாரா? ஸ்டேடஸ் போடுவது அவர் விருப்பம், அதை நாம் தடுக்க முடியாது.

கே:- உரிமைமீறல் குழு அறிக்கை அளித்துள்ளார்களா?

ப:- உரிமை மீறல் குழு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அவர்கள் முழுமையாக விசாரணை முடித்த பின்னர்தான் என்னிடம் அறிக்கை தருவார்கள்.

கே:- யாருக்கு அதிகாரம் என்பது குறித்து தேவைப்பட்டால் கோர்ட்டை அணுகி தெரிந்து கொள்ளும்படி கவர்னர் கூறியுள்ளாரே?

ப:- கவர்னருக்கு தேவைப்பட்டால் அவர் கோர்ட்டை அணுகி தெரிந்து கொள்ளட்டும்.

கே:- உங்கள் உத்தரவின் படி செயல்பட்ட தலைமை செயலாளர் மீது கவர்னர் நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்?

ப:- வரும்போது பார்ப்போம். இதுவரை கவர்னர் கையெழுத்திட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஏன் அப்படி உத்தரவு தரவில்லை. அவர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

கே:- அரசியலமைப்பு சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டசபைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளதே?

ப:- துணை நிலை ஆளுநர் பதவி அரசியலமைப்பு ரீதியிலான பதவி கிடையாது. மாநில கவர்னர் பதவிதான் அரசியலமைப்பு ரீதியிலான பதவி. கவர்னருக்கு உள்ள அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு கிடையாது. ஆனால், சபாநாயகருக்கான அதிகாரம் நாடு முழுவதும் பொதுவானது.

கே:- கவர்னர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்போவதாக அ.தி.மு.க. கூறியுள்ளதே? அப்படி புகார் அளித்தால் ஏற்பீர்களா?

ப:- முதலில் கவர்னர் மீது புகார் தரட்டும். அதன் பின் சபை முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Similar News