செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல்: மங்கள்யான் விண்கலம் ஆய்வு

Published On 2017-03-28 02:30 GMT   |   Update On 2017-03-28 02:30 GMT
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருப்பதாக ‘மங்கள்யான்’ விண்கலம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
சென்னை:

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இதனை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

10 மாத பயணத்துக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி அந்த விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையை அடைந்தது. தன்னுடைய ஆயுள் காலத்தையும் கடந்து செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் ‘மங்கள்யான்’ செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வைத்து வருகிறது.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதைக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அடையச் செய்த ஒரே நாடு என்ற பெருமையை இச்சாதனை மூலம் இந்தியா பெற்றுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நிறமாலை மானி என்று அழைக்கப்படும் ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி சில ஆய்வு குறிப்புகளை இஸ்ரோவுக்கு தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல் அடுக்கில் உயிர் வாழ்வதற்கான வாயு இருப்பதால் சாதகமான சூழல் உள்ளது என்றும், மேலும் பருவநிலையும் சாதகமான சூழ்நிலையில் இருப்பதையும் அது உறுதிப்படுத்தி உள்ளது.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். 

Similar News