செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்

Published On 2017-03-27 10:45 GMT   |   Update On 2017-03-27 10:45 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் இரு அணிகளின் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் அளித்துள்ளது.
சென்னை:

தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் தலைமையில் வக்கீல் அணியினர் இன்று தலைமை செயலகம் சென்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு கொடுக்க சென்றனர். அவர் அலுவலகத்தில் இல்லாததால் அங்குள்ள அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியினரும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியினரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தொடங்கி விட்டனர்.

கடந்த 2 நாட்களாக டி.டி.வி.தினகரனின் ஆட்கள் பணம் வினியோகம் செய்தபோது சேனியம்மன் கோவில் பகுதியில் அவர்களை கையும் களவுமாக பொது மக்கள் பிடித்தார்கள்.

இது குறித்து அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. புகாரை வாங்கவும் தயக்கம் காட்டுகிறார்கள். அமைச்சர்களே அந்த பகுதியில் முகாமிட்டு பண வினியோகம் செய்கின்றனர்.

வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கின்றனர். இதனை நாங்கள் ஆதாரத்துடன் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு அருகே உள்ள பெரம்பூருக்கு பொது மக்களை அழைத்து சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் வைத்து பணம் வினியோகிக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் வாகன சோதனை சரிவர நடக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஆளும் கட்சியினர் பண வினியோகத்தில் ஈடுபட்டு உள்ளனர். எனவே உடனடியாக பணப்பட்டு வாடாவை கண்டு பிடித்து தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Similar News