செய்திகள்

திருச்செங்கோடு வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த நபர்

Published On 2017-03-26 22:21 GMT   |   Update On 2017-03-26 22:21 GMT
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் திருச்செங்கோட்டில் ஒருவர் ரூ.246 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அவர் 45 சதவீதம் வரி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் திருச்செங்கோட்டில் ஒருவர் ரூ.246 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அவர் 45 சதவீதம் வரி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கருப்பு பண பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடியாக இறங்கியது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வைத்திருந்தவர்கள், வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர்.

வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை திரட்டி, நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் கணக்கில் காட்டாத பணம் ரூ.600 கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இப்படி கணக்கில் காட்டாத பணம் வங்கிகளில் பெருமளவு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி டெபாசிட் செய்திருப்பது கண்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்த நபரை அவர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.

இதுபற்றி வருமான வரித்துறையினர் கூறும்போது, “அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற கிளையில் இத்தனை பெரிய தொகை டெபாசிட் செய்திருப்பதை அறிந்து, நாங்கள் அவரை 15 நாட்களுக்கு மேலாக பின்தொடர்ந்து வந்தோம். முதலில் இதை அவர் மறைக்க முயற்சி செய்தார். ஆனால் சில தினங்களுக்கு பின்னர் பிரதம மந்திரியின் பி.எம்.ஜி.கே.ஒய். திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 45 சதவீதத்தை வரியாக செலுத்த ஒப்புக்கொண்டார்” என கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத பணத்தில் 25 சதவீதம், மத்திய அரசிடம் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத டெபாசிட்டாகவும் வைத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறும்போது, “கணக்கில் காட்டாத பணம் டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலோர் இந்த திட்டத்தின்கீழ் இணைய ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த திட்டம் 31-ந் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் இங்கு கணக்கில் காட்டாத கருப்பு பணம் ரூ.1000 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சுமார் ரூ.85 லட்சம் வரையில் எல்லாம் வங்கி கணக்குகளில் கருப்பு பணம் டெபாசிட் ஆகி உள்ளது. 28 ஆயிரம் வங்கி கணக்குகள் சந்தேகத்துக்கு உரியவைகளாக வருமான வரித்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

Similar News