செய்திகள்

ஊட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Published On 2017-03-24 17:25 GMT   |   Update On 2017-03-24 17:25 GMT
ஊட்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:

ஊட்டி ராஜ்பவன் அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில வருடங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

ராஜ்பவன் குடியிருப்பு பகுதியில் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் 4 கிணறுகள் அமைக்கப்பட்டு, அதில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த கிணறுகளில் இருந்து போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை.

இதனால் குடிநீர் இன்றி நாங்கள் சிரமப்படுகிறோம். இந்த நிலையில் வனப்பகுதியில் உள்ள நீரூற்றில் இருந்து ரப்பர் குழாய்கள் அமைத்து எங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து வந்தோம். இந்த ரப்பர் குழாய்களை எங்களது சொந்த செலவில் அமைத்தோம்.

இந்த நிலையில் ராஜ்பவன் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நாங்கள் அமைத்த ரப்பர் குழாய்களை அகற்றி விட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டால் அவர் அவதூறாக பேசுகிறார். இதனால் எங்களுக்கு குடிநீர் கிடைக்காத அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News