செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் தாமதத்திற்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம்: சட்டசபையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2017-03-24 13:14 GMT   |   Update On 2017-03-24 13:14 GMT
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபின்னர், காவிரி மேலாண்மை வாரியம் தாமதம் ஆனதற்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இங்கே தெரிவித்தார். அம்மாவின் அரசு சட்டப்போராட்டம் நடத்தித் தான் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது, அம்மாவினுடைய ஆட்சியில். அதற்குப் பிறகு தொடர்ந்து அம்மா எடுத்த நடவடிக்கைகயின்படி 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கையும் அம்மாவினுடைய அரசு எடுத்து வருகிறது.

அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையை பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக இன்றைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவில்லை. ஆகவே, அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டிருக்கேயொழிய, அதற்குண்டான பணிகள் முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றத்திலே இப்பொழுது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டப்படி நம்முடைய உச்சநீதிமன்றத்திலே நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் அப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் மத்தியில் இருந்தீர்கள். 2007-ஆம் ஆண்டே நடுவர்மன்றத் தீர்ப்பு வந்து விட்டது. விரைவாக அரசிதழில் வெளியிட்டு மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். 2007-லிருந்து 2010 வரை ஆட்சியில் இருந்திருக்கிறீர்கள், மத்தியில், மூன்றாண்டு காலம் இருந்திருக்கிறீர்கள். என்ன செய்திருக்கிறீர்கள்? அது தான் என்னுடைய கேள்வி. இன்றைக்கு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதற்கு நீங்கள் தான் காரணம், வேறு யாரும் இல்லை.

2007, இரண்டாவது மாதம் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அதிலிருந்து நீங்கள் ஆட்சி அதிகாரத்திலே மத்தியில் இருந்தீர்கள். அப்பொழுது அரசிதழில் வெளியிடப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் விவசாயிகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News