செய்திகள்

ஐகோர்ட்டில் ஆஜரானார் கமிஷனர் ஜார்ஜ்: அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு

Published On 2017-03-24 09:20 GMT   |   Update On 2017-03-24 09:20 GMT
நிலுவை வழக்குகள் தொடர்பான வழக்கின் விசாரணைக்காக, ஐகோர்ட் உத்தரவின்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். அடுத்த விசாரணையில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகளில், எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது? என்று அறிக்கையை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிக்கையை போலீஸ் கமி‌ஷனர் தாக்கல் செய்யாததால், அவரை நேரில் ஆஜராகும்படி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த 20-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் கமிஷனர் ஜார்ஜ் ஆஜராகவில்லை.

அவர் சார்பில் ஆஜரான அரசு வக்கீல் கோவிந்தராஜ், ஐகோர்ட்டின் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு வழக்குகளின் விவரங்கள் கொண்ட அறிக்கை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றார். ஆனால், கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி கமிஷனர் ஜார்ஜ் இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.



நிலுவை வழக்குகளுக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை கமிஷனர் ஜார்ஜ் தாக்கல் செய்தார். அப்போது, வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்து வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டெம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கமிஷனர் ஜார்ஜ் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.

Similar News