செய்திகள்

தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம்: வைகோ கண்டனம்

Published On 2017-03-24 02:51 GMT   |   Update On 2017-03-24 02:51 GMT
தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது அநீதியாகும் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்ததாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில்கொண்டு மத்திய அரசு ரூ.39 ஆயிரத்து 565 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் வறட்சி நிலையை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழு, வெறும் ரூ.2,096.80 கோடி வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது வேதனை தருகிறது. இது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.


காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைத்து, காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையைச் செய்யாமல் வஞ்சித்த மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வறட்சி நிதி அளிப்பதில் பாரபட்சம் காட்டுவது அநீதியாகும்.

மத்தியக் குழுவின் பரிந்துரையை பரிசீலனைக்கு ஏற்காமல், உடனடியாக தமிழக அரசு வைத்த கோரிக்கையின்படி ரூ.39 ஆயிரத்து 565 கோடி வறட்சி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார். 

Similar News