செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகளுக்கு சிறை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-24 01:37 GMT   |   Update On 2017-03-24 01:37 GMT
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் இருவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரியான சென்னகிருஷ்ணன் உள்பட பலர், வங்கியில் புதிய ஊழியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணைக்காக சென்ன கிருஷ்ணன் கடந்த ஆண்டு மே 25-ந் தேதி நேரில் ஆஜராக வங்கியின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, ஒழுங்கு நடவடிக்கை பிரிவு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால் அந்த தடைக்கு எதிராக வங்கி நிர்வாகம் முறையிட்டது. கடந்த ஆண்டு மே 30-ந் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஐகோர்ட்டு, தீர்ப்பை ஒத்தி வைத்தது.

ஆனால், ‘இடைக்கால தடை உத்தரவை ஐகோர்ட்டு நீக்கிவிட்டது; ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு மே 31-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும்’ என்று சென்னகிருஷ்ணனுக்கு மே 30-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


இதையடுத்து தன்னை பணி நீக்கம் செய்த தலைமை மேலாளர் கே.எஸ்.கணபதி சுப்பிரமணியன் (ஒழுங்குமுறை ஆணையம்), தலைமை மேலாளர் என்.சுப்பிரமணியன் (ஒழுங்கு நடவடிக்கை பிரிவு) ஆகியோர் மீது சென்னகிருஷ்ணன், ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் தலைமை மேலாளர்கள் கே.எஸ்.கணபதி சுப்பிரமணியன், என்.சுப்பிரமணியன் ஆகியோர் ஐகோர்ட்டை அவமதித்ததால், அவர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று முடிவு செய்து இருவருக்கும் தலா ஒரு வாரம் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. 

Similar News