செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்பு மனு தாக்கல்: தேர்தல் அலுவலர்

Published On 2017-03-23 11:50 GMT   |   Update On 2017-03-23 11:50 GMT
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ந்தேதி  இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

கடைசி நாளான இன்று காலை ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மதுசூதனன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

சசிகலா அணியை சேர்ந்த டி.டி.வி.தினகரன், பா.ஜனதா வேட்பாளர் கங்கை அமரன், தீபா ஆகியோர் பிற்பகலில் மனுதாக்கல் செய்தனர். முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். கடைசி நாளான இன்று மட்டும் 72 பேர் மனு தாக்கல் செய்தனர்.



வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்திற்குப் பிறகு ஏப்ரல் 12-ம்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Similar News