செய்திகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் யானை பலி

Published On 2017-03-21 16:11 GMT   |   Update On 2017-03-21 16:11 GMT
ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் யானை திடீரென இறந்தது. இதனை தொடர்ந்து யானைகள் இறப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி கிராமப்புற பகுதிகளுக்கு வருகின்றன.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தனியாக சுற்றித்திரிந்தது. தொற்றுநோய் பாதிப்புக்குள்ளான அந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆண்யானை நேற்று ஒகேனக்கல் வனப்பகுதியில் திடீரென இறந்து கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் திருமால், வனச்சரகர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் யானையை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் பிரகாஷ் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அந்த யானையின் உடல் அந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் இறப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News