செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்

Published On 2017-03-21 12:27 GMT   |   Update On 2017-03-21 12:28 GMT
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 8-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

7-வது நாளான நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். வளாகத்திற்குள் அமைக்கப்பட்டு இருந்த சாமியானா பந்தலியே தங்கி இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இன்று 8-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சமையல் செய்து சமைத்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட துணை தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜ், துணைத் தலைவர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜ் கூறியதாவது:-

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

நாளை(புதன்கிழமை) சென்னை சென்று ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரை சந்தித்து முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Similar News