செய்திகள்

பெரம்பலூர் அருகே இன்று சீரற்ற குடிநீர் விநியோகத்தை கண்டித்து திடீர் சாலை மறியல்

Published On 2017-03-20 16:36 GMT   |   Update On 2017-03-20 16:36 GMT
பெரம்பலூர் அருகே இன்று சீரற்ற குடிநீர் விநியோகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட் ஆண்கள் மற்றும் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

தமிழகத்தில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாகவும், போதிய மழையின்மையாலும் வரலாறு காணாத அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் புறவழிச்சாலை பகுதியில் இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண் கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் திரண்டனர்.

தங்கள் பகுதியில் 20 நாட் களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், அந்த தண்ணீரும் முறையாக வழங்கப்படுவதில்லை   என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தங்களுக்கு வாரம் ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் சீராக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் சாலைமறியல் போராட்டம் நடத்துவதாகவும் கூறினர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன்  பேச்சு  வார்த்தை நடத்தினர்.

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த  உரிய  நடவடிக்கை  எடுக்கப்படும், வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் காரணமாக எளம்பலூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Similar News