செய்திகள்

நீர் ஆதாரத்தை பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: நமச்சிவாயம் பேச்சு

Published On 2017-03-17 14:35 GMT   |   Update On 2017-03-17 14:35 GMT
நீர் ஆதாரத்தை பாதுகாப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி:

புதுவையில் நீர்வள மேம்பாடு, சீமை கருவேல மரங்கள் அழித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள அப்துல்கலாம் மைய கருத்தரங்கு கூடத்தில் இன்று நடைபெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

எதிர்கால சந்ததிகளுக்கு வீடு, நிலம், பணம் ஆகியவற்றை சேர்ப்பது மட்டும் சொத்து ஆகாது. நல்ல குடிநீர், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை தருவது தான் உண்மையான சொத்தாக இருக்கும்.

எங்களது அரசு பொறுப்பேற்ற பிறகு நிலத்தடி நீரை மேம்படுத்தவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

புதுவையில் 84 ஏரியும், 300-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. ஏரிகளை தூர் வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் தலா ரூ.20 லட்சம் செலவில் 20 குளங்களும் தூர் வாரப்படுகிறது. நிலத்தடி நீர் தன்மை உப்பு நீராக மாறிக் கொண்டு வருகிறது. ரெட்டியார் பாளையம் வரை உப்பு நீர் கலந்துள்ளது. நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அரசின் பணி மட்டுமல்ல, இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், அரசு செயலாளர்கள் மிகிர்வர்தன், பாபு, அதிகாரிகள் துவாரகநாத், முகமது மன்சூர், குமார், ருத்ரகவுடு, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சாமி நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News