செய்திகள்

முத்துக்கிருஷ்ணன் மரணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்- தாயார் அலமேலு

Published On 2017-03-16 04:48 GMT   |   Update On 2017-03-16 04:48 GMT
என் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என முத்துக்கிருஷ்ணனின் தாயார் அலமேலு கூறினார்.
சேலம்:

டெல்லியில் தற்கொலை செய்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் இன்று காலை சேலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து கதறி அழுத அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியதாவது:-

கடந்த 16-ந்தேதி வீட்டிற்கு வருவேன் என்று போனில் என்னிடம் தெரிவித்தான். ஆனால் இப்படி பிணமாக வருவான் என்று நான் நினைக்கவில்லை. சாப்பிடாமல் எந்த நேரமும் படிப்பு, படிப்பு என்று படித்துக்கொண்டே இருந்தான். நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தோம்.

ஆனால் இன்று பிணமாக வந்து இருக்கிறான். அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவன் தைரியசாலி, கோழை கிடையாது, சாகும்போது கூட ஹெட்போனை காதில் மாட்டி இருக்கிறான். இதனால் அவன் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. இது திட்டமிட்ட கொலை தான். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முத்துக்கிருஷ்ணன் உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.

முத்துக்கிருஷ்ணனின் சகோதரிகள் கலைவாணி, சுபா, ஜெயந்தி ஆகியோர் கூறியதாவது:-

எங்களது சகோதரர் தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை. அவரது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

  முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு பன்னீர்செல்வம் எம்.பி. மற்றும் கலெக்டர் சம்பத் ஆகியோர் அஞ்சலி செலுத்திய காட்சி.

எனது மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல, அவனது சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு முத்துக்கிருஷ்ணனின் தந்தை கூறினார்.

Similar News