செய்திகள்
புதுவை சுற்றுலாத்துறை அமைச்சகம்

வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.: சமரசம் செய்த முதலமைச்சர்

Published On 2017-03-14 10:31 GMT   |   Update On 2017-03-14 10:31 GMT
புதுவையில் அமைச்சருடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக சேர்மன் பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ. முயற்சிப்பதாக வந்த தகவலையடுத்து அவரை முதல்வர் நாராயணசாமி சமாதானப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை அடுத்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இதில், அமைச்சர் பதவி மற்றும் அரசு பதவிகள் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

புதுவை சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவராக எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். புதுவை சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த வாரியம் வருகிறது.

இந்த துறையின் அமைச்சராக மல்லாடி கிருஷ்ணாராவ் இருந்து வருகிறார். அவருக்கும், எம்.என்.ஆர். பாலனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது, மோதலாக உருவெடுத்தது.

இந்த நிலையில் அவர் தனது வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. அவர், தனது ராஜினாமா கடிதத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் இன்று காலை கொடுக்கப்போவதாகவும் தகவல் பரவியது.

இதுபற்றி அறிந்த பத்திரிகையாளர்கள் சட்டசபையில் குவிந்தனர்.



அப்போது எம்.என்.ஆர். பாலன் அரசு வழங்கிய காரை தவிர்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் சட்டசபைக்கு வந்தார். அவர், நேராக முதல்-அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கேபினட் அறைக்கு சென்று அமர்ந்தார்.

எம்.என்.ஆர் பாலனை பார்த்ததும் பத்திரிகையாளர்கள் அவரிடம் சென்று இதுபற்றி கேட்டு கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த அறைக்குள் வந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சிறு குடும்ப பிரச்சினை. நாங்களே இதை தீர்த்து வைப்போம் என்று கூறினார்.


புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி

பின்னர் அவர் எம்.என்.ஆர். பாலனிடம் இது சம்பந்தமாக பேசி சமரசம் செய்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த எம்.என்.ஆர். பாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சேர்மனாக நான் இருக்கிறேன். அங்கு பல தவறுகள் நடந்தன. எனவே, மேலாண்மை இயக்குனரை மாற்றும்படி கூறினேன். அதன்படி அவர் மாற்றப்பட்டார்.

கடந்த ஆட்சி காலத்திலும் பல தவறுகள் நடந்தன. இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. நான் சேர்மனாக இருந்தாலும் இங்கு அமைச்சரின் தலையீடு அதிகமாக உள்ளது. அங்கு என்ன நடக்கிறது? என்று எனக்கே தெரியவில்லை.

ரூ.3 கோடி திட்டதுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபற்றியும் எனக்கு தெரியாது. 2 படகுகள் வாங்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் சொல்லப்படவில்லை. 10 மின் கம்பங்கள் திடீரென அங்கு வந்துள்ளன. அவை எதற்காக வந்தது என்பதும் தெரியவில்லை. அமைச்சரின் தலையீடு அதிகமாக இருப்பது தொடர்பாக நான் முதல்-அமைச்சரிடம் புகார் கூறி இருக்கிறேன்.

இது சம்பந்தமாக அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறேன். இல்லையென்றால் எம்.எல்.ஏ. பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். ஆனாலும், கட்சிக்கோ, ஆட்சிக்கோ ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், வாரிய தலைவர் பதவியை எம்.என்.ஆர்.பாலன் ராஜினாமா செய்துள்ளாரா? அவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாரே? என்ற கேள்விக்கு, குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு இருக்கும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். அவர் ராஜினாமா செய்யவில்லை. நான்கூட மாசி மகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றேன். அதேபோல அரசு வாகனத்தை தவிர்த்து தன் சொந்த வாகனத்தில் வந்திருப்பார் என தெரிவித்தார்.

Similar News