செய்திகள்

பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுகிறார்: டி.டி.வி.தினகரன் தாக்கு

Published On 2017-03-11 10:55 GMT   |   Update On 2017-03-11 10:55 GMT
பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுகிறார் என்று துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டியில் கூறியுள்ளார்.

வில்லிவாக்கம்:

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த நாள் விழா திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு திருநின்றவூரில் முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அம்பத்தூரில் 10 ஆயிரம் பேருக்கு புடவை, 300 பேருக்கு தையல் இயந்திரம், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் கல்வி உதவி தொகை, விளையாட்டு சாதனங்கள் போன்றவற்றை வழங்கி பேசினார்.

அம்மா உயிருடன் இருந்தபோது எங்கோ நம்மை கட்சியில் இணைத்து பல முக்கிய பொறுப்புகளை வழங்கி கட்டு கோப்பாக ஆட்சி நடத்தி அழகு பார்த்தார். ஆனால் இப்போது நம்மிடம் அம்மா இல்லை. அம்மா உயிருடன் இருந்த போது ஓ.பன்னீர்செல்வத்தை இரண்டு முறை முதல்வராக்கினார். அப்படி அம்மாவால் இரண்டு முறை முதல்வர் ஆன ஓ.பன்னீர்செல்வம் இப்போது தன்னிலை மறந்து பதவிக்காக எதிரிகளோடு இணைந்து கபட நாடகம் செய்து வருகிறார்.

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது அதிமுக ஆட்சியை உடைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வருகிறார். அது நடக்காது தொடர்ந்து அதிமுக தான் ஆட்சியில் இருக்கும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுகவிற்கு சாவுமணி அடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டி.டி.வி.தினகரனுக்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வீரவாள் பரிசளித்தார்.அமைச்சர்கள் இரா. காமராஜ், பா.பென்ஜமின், பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. பலராமன், முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன், பி.வி.ரமணா , எஸ்.அப்துல்ரஹிம், மற்றும் நிர்வாகிகள் திருவேற்காடு சீனிவாசன், டன்லப் வேலன், கே.பி.முகுந்தன், வித்யா லட்சுமி முகுந்தன், வழக்கறிஞர்கள் அறிவரசன், முருகேசன், ராமச்சந்திரன், நிர்மல் குமார், அம்பத்தூர் ஆர்,வி. அன்பு, முனியாண்டி, தனலட்சுமி, குப்பம்மாள் வேலாயுதம், வடகரை சுந்தர், ராஜா.எ.பேரழகன் ,எம்.எம்.மூர்த்தி, மைக்பாலா, மாவட்ட துணை செயலாளர் புலவர் ரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News