செய்திகள்

ஆர்.கே.நகரில் நியாயமாக இடைத்தேர்தல் நடைபெற போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மாற்ற வேண்டும்: தி.மு.க.புகார்

Published On 2017-03-11 09:39 GMT   |   Update On 2017-03-11 09:39 GMT
ஆர்.கே.நகரில் நியாயமாக இடைத்தேர்தல் நடைபெற போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் மாற்றப்பட வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை:

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இவர் ஆளும் ஆ.தி.மு.க.வுக்கு சாதகமாக நடந்து கொள்ளக்கூடியவர்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலின் போது போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் இடமாற்றம் செய்யப்பட்டு சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் போலீஸ் கமி‌ஷனராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டு விட்டார்.


மெரினாவில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்தவர் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ்.

சசிகலாவை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக கூவத்தூரில் 128 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போதும், அவர்களை சட்டமன்றத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் மறைமுகமாக முழு பாதுகாப்பு கொடுத்தவர் ஜார்ஜ்.

அதன்பிறகு சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கு கோரும் போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகளை சட்டசபைக்குள் அனுப்பி அவர்களை முரட்டுத் தனமாக தாக்கி வெளியேற்ற காரணமாக இருந்தவர் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ்.

சசிகலா தரப்புக்கு சாதகமாக நடந்து கொள்ளும் ஜார்ஜ் ஆர்.கே.நகர் தொகுதியிலும் சசிகலா தரப்பு அ.தி.மு.க. வேட்பாளருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்பதால் இவரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்.

அப்போதுதான் ஆர்.கே.நகரில் நியாயமாக தேர்தல் நடைபெறும். எனவே போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை உடனே மாற்ற தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News