செய்திகள்
காயம் அடைந்த மீனவர் சரோனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.

மீனவர் பிரிட்ஜோ குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

Published On 2017-03-11 04:32 GMT   |   Update On 2017-03-11 04:32 GMT
தங்கச்சி மடம் சென்ற மு.க.ஸ்டாலின் பலியான பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற, தி.முக. ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
ராமேசுவரம்:

ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோ, கடந்த 6-ந்தேதி நடுக்கடலில் மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் பலியானார். மேலும் மீனவர் சரோன் காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், குழந்தை ஏசு ஆலயம் முன்பு திரண்டு, அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்யப்பட வேண்டும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட வேணடும், இதற்கான உறுதியை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி நேரில் வந்து தெரிவிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, பலியான பிரிட்ஜோவின் உடலை வாங்க மாடடோம் என்றும் மீனவர்கள் கூறி விட்டனர். இதனால் பிரிட்ஜோ உடல் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்களால் ‘தமிழன் பிரிட்ஜோ’ என எழுதியும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை 4-வது நாளான நேற்று பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

நாம் தமிழ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்ட களத்தில் இருந்த பிரிட்ஜோவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மீனவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் வெடிக்கும் என அவர் கூறினார்.

இதற்கிடையில் நாகை, காரைக்கால், அக்காரெட்டியப்பட்டி என பல பகுதி மீனவர்களும், தங்கச்சிமடம் வந்து போராட்ட களத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் போராட்ட களம் தொடர்ந்து தீவிரம் பெற்று வருகிறது.



தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராமநாதபுரம் வந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் குண்டு காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர் சரோனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்று காலை தங்கச்சி மடம் சென்ற அவர், பலியான பிரிட்ஜோவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற, தி.முக. ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப.தங்க வேலன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் திவாகரன், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News