செய்திகள்

டி.டி.வி.தினகரன் போட்டியிட தயக்கம்? சசிகலா உத்தரவுக்காக காத்திருக்கிறார்

Published On 2017-03-10 07:33 GMT   |   Update On 2017-03-10 07:33 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா உத்தரவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

அ.திமு.க. பொதுச் செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சசிகலா, அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். முதல்- அமைச்சர் பதவியை குறிவைத்து அவர் காய் நகர்த்திய நேரத்தில், சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால் சசிகலா சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது முதல்-அமைச்சர் கனவும் தகர்ந்தது.

இதையடுத்து கட்சியை வழிநடத்துவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை சசிகலா நியமித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வசதியாகவே டி.டி.வி.தினகரன் கட்சியில் முன்னிலைப்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரனே போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போதைய சூழலில் அவர் போட்டியிடுவதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா உத்தரவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்துள்ளார்.

Similar News