செய்திகள்

திடீர் மின்தடை: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழப்பு

Published On 2017-03-09 09:15 GMT   |   Update On 2017-03-09 09:15 GMT
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மின்சாரம் திடீரென தடைபட்டு எந்திரங்கள் செயலிழந்ததால் 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு இன்று மதியம் 3-வது மாடியில் உள்ள சிறுநீரக துறையில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது திடீரென மின்சாரம் நின்று விட்டது. அதற்கான மாற்று ஏற்பாடாக செய்யப்பட்டுள்ள மின்சாதனமும் செயல்படவில்லை. இதனால் டயாலிசிஸ் கருவிகள் இயங்கவில்லை.

எனவே, டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்தவர்கள் உயிருக்கு போராடினார்கள். அவர்களை காப்பாற்ற முயற்சி நடந்தது. அதையும் மீறி கதிர்காமத்தை சேர்ந்த சுசிலா (வயது 75), வீமன் நகரை சேர்ந்த அம்சா (55) மற்றும் கணேஷ் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் இறந்தவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆஸ்பத்திரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உறவினர்களை சமாதானம் செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் மற்றும் தொழிலநுட்ப ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News