செய்திகள்

வறட்சி பகுதியை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை

Published On 2017-03-05 09:13 GMT   |   Update On 2017-03-05 09:13 GMT
வறட்சி பகுதியை பார்வையிட மத்திய குழுவினர் இன்று பிற்பகல் புதுவை வருகின்றனர். இன்று மாலை புதுவை தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
புதுச்சேரி:

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவை, காரைக்காலில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததாலும், காவிரி நீர் வராததாலும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.



இக்கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு வறட்சி பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தது.

அதன்படி மத்திய குழுவினர் இன்று பிற்பகல் புதுவை வருகின்றனர். மத்திய வேளாண்துறை இணை செயலர் ராணி கமுதினி தலைமையிலான இந்த குழுவில் சந்தோஷ், பொன்னுசாமி, கணேஷ்ராம், ரத்ன பிரசாத், மீனா, அழகேசன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு துறை நிபுணர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று மாலை புதுவை தலைமை செயலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) காரைக்கால் செல்லும் மத்திய குழுவினர்அங்கு வறட்சி பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறை கேட்கின்றனர். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) புதுவையில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வின் போது, முதல்-அமைச்சர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் செல்கின்றனர். புதுவை- காரைக்கால் வறட்சி பகுதிகளை பார்வையிடும் மத்திய குழுவினர் அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு அளிப்பார்கள். அதன் பின்னரே புதுவை மாநிலத்துக்கு வறட்சி நிதியை மத்திய அரசு அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Similar News