செய்திகள்

அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் - முதல்வர் ஆவேசம்

Published On 2017-03-04 18:55 GMT   |   Update On 2017-03-04 19:50 GMT
அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்டையர் பேட்டையில் நடந்த பொதுகூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.
சென்னை:

சென்னை தண்டையார்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் பொதுக்கூடம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்தத் திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. அதேபோல் தமிழக மக்களுக்கு பாதகமாக எது இருக்கிறதோ அதை அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒரு போதும் செயல்படுத்த விடமாட்டோம்.

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளேன். சில அரசியல் விரோதிகள் விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை அரசியலாக்குகின்றனர். தமிழக அரசு மக்களுக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட்டுவருகிறது. ஆனால், அரசு மீது திட்டமிட்டு களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்.

எம்.ஜி.யார் இருந்த போது ஜெயலலிதாவை அவமானப்படுத்தியவர் பி.எச்.பாண்டியன். ஆனால், தற்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவித்த பெரும்பாலான திட்டங்கள் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் ஒப்பீடு செய்து பார்க்கலாம். இந்நியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் என்ற நிலையை உருவாக்கியவர் ஜெயலலிதா, அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அவரின் கனவுத் திட்டங்களை நினைவாக்க பாடுபடும்.

இவ்வாறு பேசினார்.

Similar News