செய்திகள்

புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்: அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2017-03-04 05:23 GMT   |   Update On 2017-03-04 05:23 GMT
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டுகிறார் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்றது முதல் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் கவர்னர் கிரண்பேடி முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார் என்று கவர்னர் கிரண்பேடி மீது ஏற்கனவே அமைச்சர் கந்தசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி மீது மேலும் ஒரு அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார்.

காரைக்காலில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசு விளையாட்டு திடலை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

புதுவையில் இப்போதுள்ள அரசியல் சூழலில் நாராயணசாமி இல்லாமல் வேறு யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் இதுபோன்று சிறப்பான ஆட்சியை நடத்த முடியாது.


அதே வேளையில் முக்கிய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கோப்புகளை கவர்னருக்கு அனுப்பினால் அவர் திருப்பி அனுப்பி விடுகிறார். ஒரு சில கோப்புகளை மாதக்கணக்கில் முடக்கி வைக்கிறார். எந்தவொரு கோப்புக்கும் கவர்னர் மாளிகையில் இருந்து உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை.

ஏற்கனவே புதுவையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த ரங்கசாமி விலகி விட்டார். ஆனால், தற்போது கவர்னர் முட்டுக்கட்டையாக உள்ளார். கவர்னர் கிரண்பேடியினால் புதுவையில் கடுமையான அரசியல் சூழல் நிலவுகிறது. அவர் விலகினால் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெறும். இதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News